சிப் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி| Dinamalar

வாஷிங்டன் : சீனாவுக்கு அதிநவீன, ‘கம்ப்யூட்டர் சிப்’களை ஏற்றுமதி செய்ய சிறப்பு உரிமம் பெற வேண்டும் என, அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த முடிவு, தொழில்நுட்பத் துறையில் சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்க விதித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தடை விதிப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, அமெரிக்க – சீன உறவில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், அடுத்த அதிரடி அறிவிப்பை அமெரிக்க அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, ‘அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அதிநவீன கம்ப்யூட்டர் சிப்களை, சிறப்பு உரிமம் பெறாமல் இனி ஏற்றுமதி செய்யக் கூடாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, சிப் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில், அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் சிப்களையும், சிறப்பு உரிமம் இன்றி ஏற்றுமதி செய்யக் கூடாது என்றும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது, சீன தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிநவீன சிப்கள், ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ‘மொபைல் போன்கள், கார்கள், ரெப்ரிஜிரேட்டர்கள்’ முதல், முக்கிய ராணுவ நடவடிக்கைகள் வரை இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் ஆதாரமான சிப்கள் ஏற்றுமதி தடைபட்டால், அது சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த சிப்களை சீனா உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால், அதற்கு மிகப் பெரும் முதலீடும், தொழில்நுட்ப பின்னணியும் தேவை. மேலும், தரத்தில் உயர்வான சிப்களை தயாரிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கூறப்படுகிறது. ‘அமெரிக்காவின் இந்த முடிவு, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது’ என, சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

இன்ஜினியர்கள் ராஜினாமா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவில், ‘சீனாவில் பணியாற்றும் அமெரிக்க குடிமக்கள், அதிநவீன சிப்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தங்கள் பணியை தொடரக்கூடாது. மீறி தொடர்ந்தால், அவர்கள் அமெரிக்க குடியுரிமையை இழக்க நேரிடும்’ என எச்சரித்து இருந்தார். இதையடுத்து, சீன நிறுவனங்களில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.