சேலம்: தமிழகத்தில் உள்ள மருந்து கிடங்குகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை.எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் இருந்தால் நேரில் வந்து ஆய்வு செய்யலாம்,வழக்கு போடமாட்டோம் என சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் இரும்பாலையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:மருத்துவ சேவையில் எந்தவித குழப்பமும் இல்லை. தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் உள்ளன. அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் உள்ளது. தற்போது, 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இதுவரை 76 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருக்குமானால் மருந்து கிடங்கு மற்றும் மருத்துவமனையில் எந்த கட்சினரும் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து எடப்பாடி பழனிசாமி மருந்துகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவருக்கு நேரம் இருந்தால் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கிடங்குகளில் நேரில் வந்து ஆய்வு செய்யலாம். அவர் ஆய்வு செய்வதற்கு அனுமதி தருகிறோம். வழக்கு எல்லாம் போடமாட்டோம்.
சென்னையில் வாடகை தாய்களை அடைத்து வைத்து குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சினை முட்டை விவகாரத்தில் 5 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 90 மருத்துவமனைகளுக்கு விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா விவகாரத்தில் முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது, விதிமுறைகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.