“தமிழர்களை கேலி செய்தால் சும்மா இருக்க மாட்டேன்!'' – ஹேமமாலினி @1971 #AppExclusive

ம்பாயில், ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் நானும் நடிகர் ஜிதேந்திராவும் சத்ருகன் சின்ஹாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஜிதேந்திரா பெரிய கிண்டல்காரர். ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். ஆனால், சொல்வது மற்றவர்கள் உள்ளத்தைப் புண்படுத்திவிடும். அன்று என் மனத்தைப் புண்படுத்திவிட்டார்.

பேச்சோடு பேச்சாக நம் தமிழ்நாட்டுப் பட முதலாளிகளைப் பற்றியும், அவர்கள் வேட்டி உடுத்துவது, சூட் அணிந்து கொள்வது, நடப்பது, பேசுவது, வாழை இலை முன் உட்கார்ந்து சாப்பிடுவது ஆகியவற்றைப் பற்றியும் கிண்டலாக ஜிதேந்திரா ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, சத்ருகன் சின்ஹாவும் அதைப் பிரமாதமாக ரசித்துச் சிரித்துக்கொண்டு இருந்தார்.

எனக்கோ கோபமான கோபம்! நம் எதிரிலேயே தமிழ்நாட்டுப் பட முதலாளிகளையும் மற்றவர்களையும் கேலி செய்வதா? என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Hemamalini

”மிஸ்டர் ஜிதேந்திரா! எங்கள் தமிழ் நாட்டவர்களின் பழக்க வழக்கங்களை நீங்கள் கேலி செய்கிறீர்களே, உங்கள் பஞ்சாபியர்களிடம் அருவருக்கத்தக்க வழக்கங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நான் கிண்டல் செய்து காட்டமுடியும். ஆனால், அது நாகரிகமல்ல” என்று சீறினேன். ஜிதேந்திரா வாயை மூடிக் கொண்டார். பிறகு என் கோபம் சத்ருகன் சின்ஹாவின் மீது திரும்பியது.

”நீங்கள் எதையும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். எங்கள் தமிழர்களைப் போல் பரந்த அறிவும் மனப்பான்மையும் கொண்டவர்களல்ல நீங்கள்” என்று சாடினேன். சத்ருகன் சின்ஹாவின் முகத்தில் ஈயாடவில்லை.

‘இவ்வளவு மோசமாகத் திட்டிவிட்டாயே!’ என்று கேட்கிறீர்களா? என் சுபாவம் அது! நம் தமிழர்களை யாராவது கேலி செய்தால், பழித்துப் பேசினால் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். என் தாயே தடுத்தாலும் சரி, அவர்களை இரண்டிலொன்று பார்க்காமல் விடமாட்டேன்.

மிழ் நடிகை புஷ்பவல்லியின் மகள் பானுரேகா, இப்போது இந்திப் படங்களில் பிரசித்தமாகி வரும் நடிகை. சென்னையில் என்னோடு குச்சுப்புடி நாட்டியப் பள்ளியில் நடனம் கற்றவர். நம் தமிழ்நாட்டுப் பெண் ஆயிற்றே என்று ரேகா மீது என் அம்மாவுக்கு ஒரு கரிசனம். எச்சரிக்கையாக இருக்கும்படி ரேகாவுக்கு அடிக்கடி ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஏனெனில், பம்பாய் பட முதலாளிகளும் மற்றவர்களும் ரேகாவை விவரமறியாத ஒரு பெண் போல் பாவித்துத் தங்கள் இஷ்டப்படி டிரஸ் செய்ய வைத்துப் படமெடுக்கிறார்கள். நானாக இருந்தால் இப்படி டிரஸ் செய்துகொள்ளவோ நடிக்கவோ மாட்டேன். ‘டூப்’ போட்டு எடுத்துக் கொள்கிறோம் என்பார்கள். அதற்குக் கூட நன்றாக யோசித்துத்தான் பதில் சொல்வேன்.

ஆனால், ரேகா சற்று வெகுளியான பெண். எனவே, நானும் அவரிடம் இந்த விஷயங்களையெல்லாம் கவனமாகச் சொல்வேன். அவ்வளவுதானே என்னால் செய்ய முடியும்! மற்றபடி அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளில் நான் தலையிட முடியுமா?

Hemamalini

‘நாராயணீய’த்தில் கிருஷ்ணனின் லீலைகளை நான் நாட்டியமாக ஆடுவது வழக்கம். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் மியூஸிக் அகாடமியில் காளிங்கமர்த்தன தோற்றத்தை ஆடிக்காட்டினேன். ”சென்டிமென்டலாக அது சரியல்ல” என்று சிலர் தடுத்துச் சொன்னார்கள். நான் கேட்கவில்லை. பிடிவாதமாக ஆடினேன். அடுத்த ஒரு வாரத்தில், நான் மிகவும் அன்பு கொண்டிருந்த என் தாத்தா இறந்து போனார். அதற்குப் பிறகு நான் அந்த நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர்கள் சொன்னது சரி தானோ என்ற எண்ணம் எனக்கு!

பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவது எனக்குக் கட்டோடு பிடிக்காத விஷயம். ஆனால் பம்பாய் நடிக, நடிகையருக்கோ பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், ஒரே குஷிதான்! இந்த ஆண்டும் நான் புதுப் புடவை கட்டி, வீட்டிலேயே சிம்பிளாக நடத்தத் தீர்மானித்தேன். ஆனால் நான்கைந்து படத் தயாரிப்பாளர்கள் எனக்குப் போன் செய்து ‘உன் பிறந்த நாளை மிகவும் ஆடம்பரமாக தாஜ்மஹால் ஓட்டலிலாவது, அம்பாசிடர் ஓட்டலிலாவது கொண்டாடப் போகிறோம்’ என்று பயமுறுத்தினார்கள்.

‘என் பிறந்த நாளுக்காக பாவம், அவர்கள் ஏன் அதிக செலவு செய்யவேண்டும்’ என்று நினைத்து, நானே என் வீட்டில் 50 முக்கிய நபர்களை அழைத்து ஒரு விருந்து வைத்தேன். இதைக் கேள்விப்பட்டுப் பத்திரிகைக்காரர்களும் புகைப்படக்காரர்களும் எங்கள் வீட்டில் வந்து கூடிவிட்டார்கள். ஒரே அமர்க்களம்தான்! இப்படித் தாங்களாகவே வந்து அன்பும் சொந்தமும் காட்டும் பம்பாய் படவுலகைக் கண்டு நான் வியந்து போகிறேன்.

அந்த நாளில் நாங்கள் டில்லியில் இருந்தபோது, எங்கள் வீட்டுக்குத் தேடி வந்து எனக்கு ஆசி கூறுவார் டைரக்டர் கே.சுப்பிரமணியம். ‘பத்மாவைப் போல ஹேமாவும் எனக்கு இன்னொரு பெண்’ என்று அடிக்கடி சொல்வார்.

சென்னை, ‘நிருத்யோதயா’வில் என்னை ஆட வைத்துப் பத்திரிகை நிருபர்களை அழைத்து அறிமுகப்படுத்தியவரே அவர்தான். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே ரிஷிகேஷ் முகர்ஜி, அனந்த ஸ்வாமி போன்ற படத் தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்று, பேச வைத்து, ஊக்கம் கொடுத்திருக்கிறார் அவர்.

அவருடைய மறைவு, நான் வடக்கே மணாலியில் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் தெரிந்தது. அதைப் போல எனக்கு ‘ஷாக்’ கொடுத்த விஷயம் வேறு எதுவும் இல்லை!

(1971-ல் வெளியான பேட்டிகளில் இருந்து தொகுத்தது…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.