திருச்சி மாவட்டத்தில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் ஒட்டம்பட்டி பஜனைமட தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் நாகராஜ் (23). கேட்டரிங் பட்டதாரியான இவர் விவசாயம் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நாகராஜ், நேற்று மீன் பிடிப்பதற்காக பிரதீப், நிதிஷ், சிக்கதாம்பூரை சேர்ந்த ராகேஷ், சரண் மற்றும் ரங்கநாதபுரத்தை சேர்ந்து சின்னதுரை, அருண்குமார், ஆகியோருடன் சிக்கதாம் ஊரில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இடி மின்னலுடன் லேசான மழை பெய்ததால், மழையில் நனையாமல் இருப்பதற்காக அனைவரும் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தடியில் நின்றுள்ளனர். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கியதால் மரத்தடியில் நின்று கொண்டிருந்த 7 பேரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.