தேவதாசி முறை தொடர்பாக சமீபத்தில் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. ‘கோயிலில் உள்ள கடவுளுக்கு பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைத்து, அவர்கள் தேவதாசிகளாக மாற்றப்படுகின்றனர்.
எஞ்சியுள்ள காலம் முழுவதும் மதகுருக்களுக்கு பணிவிடை செய்தல், அன்றாட கோயில்சடங்குகளை செய்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க, பல சட்டங்கள் இருந்தாலும், பல பகுதிகளில் தேவதாசி முறை இன்னும் தொடர்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் பலரும் எஸ்.சி., எஸ்.டி.வகுப்பை சேர்ந்த ஏழை பெண்கள்’என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விதமாக பெண்களை தேவதாசிகளாக மாற்றுவது அவர்களது வாழும் உரிமை, கவுரவம், சம உரிமை ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான விதிமீறல் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதனால், நாளிதழ் செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரகுநாத் ராவ் தலைமையிலான குழுஅளித்த அறிக்கையில், ‘கர்நாடகா,ஆந்திரா அரசுகள் 1982 மற்றும்1988 ஆகிய ஆண்டுகளிலேயே தேவதாசி முறை சட்ட விரோதமானது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தென்னிந்திய பகுதிகளில் பல்வேறு கோயில்களில் தேவதாசி முறை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைதடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அந்த மகளிருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தி மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 6 மாநில அரசுகளுக்கு தேசியமனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.