இந்திய சுதந்திரப்போராட்ட தியாகியும், முன்னாள் பிரதமருமான ஜவஹர்லால் நேருவை, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் நேரடியாகவே விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தி, `நேருவின் கொள்கைகளை நீங்கள் விமர்சிக்கலாம் ஆனால், பொய்யான தகவல்களைப் பரப்ப உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

கசௌலி நகரில் குஷ்வந்த் சிங் லிட்ஃபெஸ்ட்(Khushwant Singh Litfest) நிகழ்ச்சியில் திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ராவின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய ராஜ்மோகன் காந்தி, “பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லையென்று பல வெள்ளை அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். அதுபோல கோடிக்கணக்கான இந்தியர்கள், மோதிலால் நேரு முஸ்லிம் என்று நம்பத் தொடங்கினர். ஒருவேளை நேரு முஸ்லிமாக இருந்தாலும், அப்படியில்லையென்றாலும், அதுவொன்றும் குற்றமில்லை.

சுதந்திரப் போராட்டத்தின்போது நேரு 14 ஆண்டுகள் சிறையிலிருந்தார். பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் என்பது மிக நீண்டது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே அவரின் மனைவி இறந்துவிடுகிறார். நீங்கள் அவருடைய கொள்கைகளை விமர்சிக்கலாம் ஆனால் பொய்யைப் பரப்ப உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று கூறினார்.