கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எடப்பாடி அணி அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இறையாண்மையை காப்பாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு அவர்கள் கீழே இறங்கி வரவில்லை. மாநில கட்சிகள் ஆட்சியில் உள்ளதால், ஒன்றிய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் எனக்கூறி ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்கின்றனர். அது ஆரோக்கியமான செயல் அல்ல. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் மாறுபட்ட சிந்தனைகள் வரும்பொழுது அதிகாரிகளிடையே குழப்பங்கள், சங்கடங்கள் ஏற்படும். பாஜ அரசு தனது செயல்பாட்டை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்கிறது.
தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்து வருகின்றனர். அதற்காக இது போன்று துருப்புச் சீட்டை எடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமாக இருக்காது. தமிழகத்தில் பாஜ காலூன்றி, ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் கிராமங்கள் தோறும் இருக்கக்கூடிய கட்சி திமுக, அதிமுக. தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சி அதிமுக என்பது எதார்த்தம், உண்மை. முதன் முதலில் சசிகலாவை எதிர்த்தவன் நான் தான். நான் அவருடன் பேசியதாக சொல்கிறார்கள். நான் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் திசை மாறிச் சென்று விட்டதாக கூறப்படுவது வருத்தமாக உள்ளது என்றார்.