மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறுமாறு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த மாநில எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.
மத்திய அரசு சார்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடுராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடந்தது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமை வகித்தார்.
இதில், தமிழகஅரசு சார்பில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தி துறை முதன்மை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐதிரும்ப பெற வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதினார்.
திருவனந்தபுரத்தில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும், இச்சட்டத்தை திரும்ப பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தினார்.
எனவே, மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பபெற வேண்டும் குறைந்த விலையில் மின்சாரத்தை தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்கு சொந்தமான மின்பகிர்மான நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும்.
எதிர்கால மின்தேவையை கருத்தில் கொண்டு, வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி விரிவாக்க நிலை-1 உள்ளிட்ட 8,340 மெகாவாட் திறனில் பல்வேறு மின்திட்டங்களை தமிழக மின்வாரியம் நிறுவி வருகிறது.
தற்போது மின்உற்பத்திக்காக தால்சர் சுரங்கத்தில் இருந்து 14 ரேக்குகள் நிலக்கரிமட்டுமே தமிழக மின்வாரியத்துக்கு அனுப்பப்படுகிறது. எனவே,கூடுதல் ரேக்குகளை வழங்க ரயில்வே துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார்.