வாண்டடா வண்டியேறிய தமிழிசை சவுந்தரராஜன் – பாஜக செம அப்செட்!

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்களை தெரிவித்தார்.

ஆளுநராக இருந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக, தேர்தல் ஆலோசனைகளை அவர் வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், “ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் சாசனத்தை மீறி உள்ளார்; அவர், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என போர்க்கொடி தூக்கி உள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:

புதுச்சேரி மின் துறை, சுற்றுலாத் துறை என அனைத்தும் குட்டிச்சுவர் ஆக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபடுவர் என்று ஜனநாயகத்தின் அடிப்படையில் மரியாதை கொடுத்து பேசி வருகின்றோம்.

ஆனால் ஆளுநர் என்பதை மறந்து 2024 ஆட்சிக்கு பாஜக வருவதற்கான ஆலோசனை குழுவில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகிறார். இவர் புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றவுடன் செய்த காரியம், ஆட்சியை கலைத்தது தான்.

சபாநாயகரும் ஜனநாயக மரபுகளை மீறுகிறார். நாங்கள் ஆர்.எஸ்.எஸ். தான், இந்துத்துவா தான் என்று கூறி நமச்சிவாயம் உள்ளிட்டோர் தைரியமாக வெளியில் கூறி வர வேண்டும். பாஜகவின் சித்தாந்தம் தமிழகம், புதுச்சேரியில் ஒரு காலமும் எடுபடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.