ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கப் போகும் 4 விஷயங்கள்!

68 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆட்சி யாருடையது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 90களுக்கு பிறகு பாஜக,
காங்கிரஸ்
என மாறி மாறி ஆட்சி அமைந்து வருகிறது. அதன்படி 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

ஆனால் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ள பாஜக, ஹிமாச்சல் பிரதேசத்தை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் தேசிய கட்சியாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி, ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதனால் களம் மும்முனை போட்டியாக மாறியுள்ளது.

எனவே வாக்காளர்களை கவர சரியான வியூகம் வகுத்து கவர்ச்சிகர திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கிட்டதட்ட ஒரே மாதிரியான தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதில், 18 முதல் 60 வயது வரையிலான மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வழங்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம், இலவச மொபைல் கிளினிக்குகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் ஒன்றுபட்டு போகின்றன. பாஜகவை பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருப்பதால், மத்தியிலும், மாநிலத்திலும் இதுவரை அமல்படுத்தியுள்ள வளர்ச்சி திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஏழைகளுக்கு மின்சாரத்தில் மானியம்,

மகளிருக்கு பேருந்து கட்டணத்தில் மானியம், கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொருளாதார ரீதியாக முன்னேறி வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடும். முதல்வர் வேட்பாளரை பொறுத்தவரை பாஜகவின் தற்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் முன்னிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஆம் ஆத்மி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பு வரவில்லை. வேட்பாளர்கள் பட்டியலில் தான் கவனம் செலுத்தி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கொரோனாவால் மாநில சுற்றுலாத் துறை பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் ஆப்பிள் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதுதவிர பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நான்கு விஷயங்களையும் மேம்படுத்தும் வகையில் எதிர்காலத் திட்டங்கள் தேவைப்படுகின்றன. எனவே இவை தான் ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியையும் தீர்மானிக்கப் போவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.