16வது நாளில் அதிகம் வசூலித்த 'காந்தாரா'

ரிஷாப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கன்னட சினிமா உலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தப் படத்தின் வெற்றி.

'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இந்தப் படத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவு ஆச்சரியமளிக்கும் விதத்தில் உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி தமிழில் 'பொன்னியின் செல்வன்', ஹிந்தியில் 'விக்ரம் வேதா' ஆகிய படங்களும், தெலுங்கில் அக்டோபர் முதல் வாரத்தில் 'காட் பாதர், த கோஸ்ட்' ஆகிய படங்கள் வெளிவந்தன.

கடற்கரை கர்நாடகா பகுதியைச் சேர்ந்த மலை கிராமத்தில் வசிக்கும் கிராமத்து மக்களின் கலாசாரம், திருவிழா, அவர்கள் பிரச்னை ஆகியவைதான் கதை என்பதால் இந்தப் படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட இயக்குனர் தயங்கியுள்ளார். கன்னட மக்களின் மண் வாசம் மற்ற மாநிலத்தவரை ஈர்க்குமா என்ற தயக்கம் இருந்துள்ளது. ஆனால், படத்திற்குக் கர்நாடகாவில் கிடைத்த பெரிய வெற்றி, கன்னட மொழியிலேயே சில மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு அவர்களை மற்ற மொழிகளில் கொஞ்சம் தாமதமாக டப்பிங் செய்து வெளியிட வைத்துள்ளது.

இந்த வாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. மூன்று மொழிகளிலும் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கன்னடத்தில் படம் வெளிவந்து நேற்றுடன் 16வது நாளான நிலையில், நேற்றுதான் இந்தப் படத்தின் வசூல் இந்திய அளவிலும், உலக அளவிலும் மிக அதிகமாக இருந்தது என படத்தைத் தயாரித்துள்ள ஹாம்பலே பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு படம் வெளியான முதல் நாளில் பெற்ற வசூலை விடவும் 16வது நாளில் பெற்ற வசூல் இவ்வளவு அதிகமாக இருப்பதும் புதிய சாதனைதான். கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது ஓடி வரும் இப்படத்தின் மலையாளப் பதிப்பு அக்டோபர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.