சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் நாளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
இன்று நடந்த சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” சட்டப்பேரவைக் கூட்டம், இன்று ஆரம்பிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மறைந்து முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, இன்றைய கூட்டம் முடித்துவைக்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றக் கூட்டம் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான வரவு செலவு திட்டத்தினை நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்.
அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கான ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொணடுவரப்பட்டு விவாதிக்கப்படும். நாளை மறுநாள் கூடுதல் செலவினத்திற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம், பதிலுரை, வாக்கெடுப்பு நடைபெறும். ஏதேனும் சட்டமுன்வடிவுகள் தரப்பட்டால், அதுகுறித்தும் சட்டமன்றத்தில் ஆய்வு செய்யப்படும். நாளை, நாளை மறுநாள் முழுமையாக சட்டமன்றம் நடைபெறும். ஆறுமுகசாமி அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் நாளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் கூறினார்.