ராமநாதபுரம்: இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கைதான இலங்கை மீனவர்கள் 5 பேரையும் அக்டோபர் 31 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
இந்திய கடலோர காவல்படையின் தூத்துக்குடி பிரிவினர் கடந்த 14-ம் தேதி தூத்துக்குடியிலிருந்து 172 நாட்டிக்கல் மைல் தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் படகையும், அதிலிருந்த 5 சிங்கள மீனவர்களையும் பிடித்தனர். விசாரணைக்கு பின்னர், தூத்துக்குடி தருவைக்குளம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்படி தருவைக்குளம் மரைன் போலீஸார், இந்திய எல்லைக்குள் மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து, இலங்கை நெகம்பு பகுதியைச் சேர்ந்த குருகுல சூரிய மார்கஸ் ஜீடு(55), நீர்கொழும்பைச் சேர்ந்த குருகுல சூரிய அண்ரணி எமர்ட் நிசாந்த் பர்னாண்டா(51), வர்ணகுல சூரிய குவந்த் ஸ்ரீலால் பர்னாண்டோ(24), குருகுல சூரிய சுதேஷ் ஷெகான் பெரேரா(21), குருகுல சூரிய இமானுவேல் டிக்சன் பர்னாண்டோ (50) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
இம்மீனவர்களை இன்று ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, இலங்கை மீனவர்களை அக்டோபர் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில், சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து இலங்கை மீனவர்கள் 5 பேரையும் மரைன் போலீஸார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.