பனாஜி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திவிட்டு, இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் கோவா முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா வலியுறுத்தி உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலை ஒட்டி, பனாஜியில் வாக்களித்த பிறகு பிரான்சிஸ்கோ சர்தின்ஹா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சசி தரூர் எனது நண்பர். நான் அவரை சந்தித்திருந்தால், போட்டியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பேன். ஏனெனில், எல்லோரும் மல்லிகார்ஜூன கார்கேவைத்தான் ஆதரிப்பார்கள். நீங்கள் தோற்பது 100% உறுதி எனும்போது எதற்காக போட்டியிட வேண்டும். நீங்களும் போட்டியிட்டீர்கள் என்று வேண்டுமானால் இருக்கலாம்.
இதற்கு முன்பு கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தபோது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். இம்முறை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேதான் வெற்றி பெறுவார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 3,500 கிலோ மீட்டர் மிக நீண்ட யாத்திரையை ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வருகிறார். ஆனால், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்கும் வலிமை கொண்ட ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். எனவே, ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திவிட்டு இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும்.
இமாச்சலப் பிரதேச தேர்தலை அடுத்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. எனவே, ராகுல் காந்தி தனது யாத்திரையை நிறுத்திவிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்” என்று அவர் கூறினார்.