கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 3,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்குள்ள கதவனை பகுதி அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள மயானக் கொட்டகைப் பகுதியில் மீனவர்கள் பயன்படுத்தி விட்டு தேவைப்படாத வலைகளை வைத்துள்ளனர்.
அந்த வலையில், சுமார் 10 அடி உடைய அரிய வகை நாகப்பாம்பு ஒன்று சிக்கியிருந்திருக்கிறது. இதையடுத்து, இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள் மற்றும் ரப்பர் படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதியில் வைப்பதற்காக சென்றனர். அப்போது, பயன்படாத வலையில் சிக்கியிருந்த அந்த பாம்பை பார்த்து அச்சமடைந்துள்ளனர்.
இதை அறிந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். புதிய வகை நல்ல பாம்பு என்பதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சமடைந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இந்த பாம்பு நீரில் அடித்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.