குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் யாருக்கு வெற்றி? பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் பக்கம் மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இருமாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை என்று சொல்லுமளவிற்கு 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வந்துள்ளது. இருப்பினும் இங்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இந்த வெற்றியானது கவுரப் பிரச்சினையாகவே மாறிவிட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக என மாறி மாறி அரியணையை அலங்கரித்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில் இம்முறை
காங்கிரஸ்
கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சி இருமாநில சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடவுள்ளது. இதன் காரணமாக மும்முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

மூன்று கட்சிகளில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? யாருடைய வாக்கு வங்கி அதிகரிக்கும்? எந்த கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும்? உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன. அதிலும் குஜராத் தேர்தல் முடிவுகளை கணிக்க முடிந்தாலும், ஹிமாச்சல் நிலவரத்தை கணிப்பதில் குழப்பம் நிலவுகிறது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற இந்த இருமாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பது பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிகவும் அவசியமாகிறது.

குறிப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் கவனமாக காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இருமாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார். இவர் பிகார் மாநில அரசியலில் புது ரத்தம் பாய்ச்சப் போவதாக ஜன் சூரஜ் யாத்ராவை கையிலெடுத்து கிளம்பியுள்ளார். மாநிலம் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரம் பயணித்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தி தினத்தில் தொடங்கிய யாத்திரை தற்போது மேற்கு சம்பரான் மாவட்டத்தில் 15வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும். இரண்டு மாநிலங்களிலும் பாஜகவிற்கே வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை எந்தவொரு தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி கையிலெடுத்துள்ளார். இதனால் அவர் இருமாநில சட்டமன்ற தேர்தல்களை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி இடம்பெறாதது பின்னடைவாக தான் இருக்கும் என்று பதிலளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.