தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலில் நடக்கும் சிறப்புப் பூஜைகள், முக்கிய திருவிழாவின் போது நடக்கும் ஊர்வலங்கள் போன்றவற்றில் யானைகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் கோமதி யானை உள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு இந்த யானையை பா.சிவந்தி ஆதித்தன் கோயிலுக்கு வழங்கினார். பக்தர்களால் கோமதி எனப் பெயரிடப்பட்ட அந்த யானை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் 28வது பிறந்தநாள் கொண்டாட்டம் சங்கரநாராயன சுவாமி கோயிலில் நடந்தது.
யானைக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள், சிறப்பான வகையில் பழங்களை வாங்கி வந்திருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பாக நடந்த விழாவில் பக்தர்கள் வாங்கிக் கொடுத்த பழங்களைச் சுவைத்தது கோமதி யானை.

பின்னர் கோயில் சார்பாக கஜ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பூஜையிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு கோமதி யானை ஆசி வழங்கியது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற பக்தர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.