திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த கும்பல் போலீசிடம் நடித்து காட்டினர். மேலும், நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மாமிசத்தை குக்கரில் வேக வைத்து சாப்பிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் பத்தனம் திட்டா மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட ஷாபி, பகவல் சிங், லைலா ஆகியோரை போலீசார் கொச்சியில் இருந்து நரபலி நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். நரபலி நடந்தது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்காக 3 பேரையும் விசாரித்தனர். ஒரு பொம்மையை வைத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 3 பேரும் உடல்கள் எப்படி வெட்டி துண்டு துண்டாக்கப்பட்டது என்பதை நடித்துக் காட்டினர்.
நரபலி கொடுக்கப்பட்ட அறையில் பல்வேறு பகுதிகளில் ரத்தக்கறைகள் காணப்பட்டன. அங்கிருந்த பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. பத்மா, ரோஸ்லியின் உடல்களை வெட்டிய பிறகு முக்கிய உடல் பாகங்களை அவர்கள் பிரிட்ஜுக்குள் வைத்திருந்தனர். அதன் பிறகு அதில் இருந்து 10 கிலோ மாமிசத்தை எடுத்து குக்கரில் வேகவைத்து 3 பேரும் சாப்பிட்டு உள்ளனர். ஆனால், தான் மாமிசத்தை சாப்பிடவில்லை என்று விசாரணையின் போது லைலா கூறினார். பின் பிரிட்ஜில் மீதமிருந்த உடல் பாகங்களை குழியில் புதைத்து உள்ளனர். மனித மாமிசத்தை வேகவைத்து சாப்பிட்ட குக்கர், உடல்களை வெட்ட பயன்படுத்திய கத்திகள், பெண்களின் வாயை ஒட்டுவதற்காக பயன்படுத்திய பிளாஸ்டர் உள்ளிட்ட பொருட்களை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர்.
உடல்களை வெட்டப் பயன்படுத்திய கத்தி, கயிறு உள்பட பொருட்களை வாங்கிய கடைகளுக்கும் 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. மயிரிழையில் உயிர் தப்பிய 2 பெண்கள்
இந்த நரபலி கும்பலிடம் இருந்து 2 பெண்கள் மயிரிழையில் உயிர் தப்பியது குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. பத்மாவுக்கும், ரோஸ்லிக்கும் முன்னதாக பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 2 பெண்களை ஷாபி குறி வைத்திருந்தார். அதில் ஒருவர் பத்தனம்திட்டா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு லாட்டரி விற்கும் பெண் ஆவார். அந்தப் பெண்ணை அணுகிய ஷாபி, ஒரு நாள் அவரிடமிருந்து மொத்தமாக லாட்டரியை விலைக்கு வாங்கி நட்பை ஏற்படுத்தி உள்ளார். அதன் பிறகு தனக்குத் தெரிந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அந்தப் பெண்ணை ஷாபி அழைத்துச் சென்றுள்ளார்.
ஒரு நாள் அங்கு வேலை பார்த்ததற்கு பகவல் சிங் ரூ.1000 சம்பளம் கொடுத்து உள்ளார். மறுநாள் வேலைக்கு வந்த போது அங்குள்ள ஒரு அறைக்கு பகவல் சிங் அந்தப் பெண்ணை அழைத்து உள்ளார். அவர் அறைக்குள் நுழைந்தவுடன், சில பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறி அங்குள்ள கட்டிலில் படுக்குமாறு கூறி உள்ளார். அந்தப் பெண் கட்டிலில் படுத்தவுடன் ஷாபி, லைலா ஆகியோர் சேர்ந்து அவரை கட்டிப் போட முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து அலறியடித்தபடி தப்பி வெளியே ஓடிவிட்டார். இதே போல பந்தளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஷாபி வீட்டு வேலைக்கு என்று கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பெண் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். இந்த 2 பெண்களும் நரபலியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். இதே போல மேலும் பல பெண்களை நரபலிக்காக இந்தக் கும்பல் அணுகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.