‘ப்ரின்ஸ்’ படம் எப்படி வந்திருக்கு?-ப்ரஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் கொடுத்த சுவாரஸ்ய தகவல்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை (17.10.2022) சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், மரியா, சுப்பு பஞ்சு, ப்ராங்க்ஸ்டர் ராகுல், பாரத், இயக்குநர் அனுதீப், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன், தயாரிப்பாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது ” ‘ப்ரின்ஸ்’ மிக எளிமையான ஒரு கதை. ஒரு இந்திய இளைஞன், ப்ரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அனுதீப் அதை வித்யாசமாக படமாக்கியிருக்கிறார். இது வழக்கமான ஒரு காமெடிப் படமாக இருக்காது.

காமெடியையும் வித்யாசமாக அணுகியிருக்கிறார். படப்பிடிப்பின் போது ஒவ்வொரு காமெடியையும் நாங்கள் புரிந்து, அதை என்ன மாதிரி விதத்தில் கடத்த வேண்டும் என யோசித்து நடித்தோம். அதுபோல பணியாற்றியது புதிதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீபாவளிக்கு குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கக் கூடிய ஒரு படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.

image

அனுதீப் அவரது தாய்மொழியான தெலுங்கில் சிந்திப்பவர். அந்த விஷயங்களை தமிழுக்கும் பொருந்தும் படி எடுக்க வேண்டும். இது சற்று சவாலான விஷயம் தான். ஆனால், இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். ஒரு தமிழ் ஹீரோ, தெலுங்கு இயக்குநர் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற பல காம்பினேஷன்கள் அமையும். எங்கள் குழுவில் படம் பார்த்தவர்களுக்கு எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது.

இப்போது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸுக்காக காத்திருக்கிறோம். எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். மேலும் இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலான தீபாளியும் கூட. முதல் முறையாக என்னுடைய படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 20 வருடத்திற்கு மேலாக தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் பார்த்திருக்கிறேன். இந்த தீபாவளிக்கு திரையரங்கில் என்னுடைய படம் ஓடும் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது சிறப்பான தீபாவளியாக அமையட்டும். கார்த்தி சாருடைய ‘சர்தார்’ படமும் 21-ம் தேதி வெளியாகிறது. ரெண்டு விதமான படங்கள் ஒரே நாளில் வருவது ஆடியன்ஸூக்கு வெரைட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சர்தார்’ டீமுக்கு வாழ்த்துகள். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். பெற்றோர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

image

முன்னதாக நடிகை மரியா பேசும் போது “முதலில் நான் என்னுடைய குழுவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நாட்டுக்கும் என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இது மிகவும் பாசமான ஒரு நாடாக நான் உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இயக்குநர் அனுதீப் கூறும்போது, ” ‘ஜதிரத்னலு’ படத்திற்குப் பிறகு எழுதிய கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரை அணுகி கதையை கூறினேன். ஏற்கனவே அவரும் ‘ஜதிரத்னலு’ படம் பார்த்திருந்தார். எனவே கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்படித் துவங்கியதுதான் ‘ப்ரின்ஸ்’ படம். ஒரு ஃபெஸ்டிவல் படமாக, பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். நான் சிறு வயதிலிருந்தே தமிழ் படங்கள் பார்த்து வளர்ந்தவன். இப்போது தமிழிலேயே ஒரு படத்தை இயக்கியிருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.