ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்டவையே: உயர் நீதிமன்றம்

மதுரை: ஆதீன மடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டப்பட்டவையே என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீனம் மடம் மிகவும் பழமையானது. இந்த மடத்துக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் முழுவதும் உள்ளன. திருப்புவனம் தாலுகாவில் ஆதின மடத்துக்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் தற்போது சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் அந்த நிலத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: “ஆதின மடத்தின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதின மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை, வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மடத்தின் சொத்துகளை குத்தகைக்கு விடுவதை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?

ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து சமய அறநிலைத் துறைக்கு கட்டுப்பட்டவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மடத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

மனுதாரர் கோரிக்கை தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். விசாரணை அக். 28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.