உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ முறையை மக்கள் விரும்பவில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சால் பரபரப்பு

அகமதாபாத்: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ முறையை பொதுமக்கள் விரும்பவில்லை என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை ‘கொலிஜியம்’ முறையில் நீதிபதிகளே தேர்வு செய்கின்றனர். இந்த கொலிஜியம் முறையை நாட்டு மக்கள் விரும்பவில்லை. எனவே அரசியல் சாசன அமைப்பின்படி, நீதிபதிகளை நியமிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக நீதிபதிகள் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.

இதனால் நீதி பரிபாலனங்கள் பாதிக்கின்றன. இந்தியாவைத் தவிர உலகில் மற்ற எந்த நாடுகளிலும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறையில்லை. நீதிபதிகள் தேர்வுக்கான கலந்தாய்வு என்பது மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற  விஷயங்களை வெளியே சொல்ல எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும், அது தொடர்பான வாதங்களும் எழுகின்றன. அரசியல் தலைவர்களிடையே நடக்கும் விஷயங்களை மக்கள் பார்க்கிறார்கள்; ஆனால் நீதித்துறைக்குள்  நடக்கும் அரசியல் பொதுமக்களுக்கு தெரியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒன்றிய சட்ட அமைச்சகம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமிக்கும் என்பது அதன் பொருளாகும். கொலீஜியத்தால் நியமனம் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டவர்களை, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியாவதற்குத் அவர்கள் தகுதியானவரா என்று பார்ப்பதே ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் பணியாக உள்ளது’ என்றார். ஏற்கனவே கடந்த மாதம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரண் ரிஜிஜூ, ‘நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.