பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு, இன்று முதல் ஆந்திர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், பாத்திரையில் தன்னுடன் வருபவர்களுடன் ராகுல் காந்தி உரையாடும் வீடியோ, அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அங்கிருந்த ஒருவர் ராகுல் காந்தியிடம், ‘வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன சன் ஸ்கிரீனை பயன்படுத்துகிறீர்கள்’ என்று கேட்க, ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே,’நான் எதையும் பயன்படுத்தவில்லை. அம்மா (சோனியா காந்தி) அனுப்பியிருந்தார்.
ஆனால், நான் பயன்படுத்தவில்லை’ எனக் கூறி, டி-சர்ட்டின் கைப்பகுதியை தூக்கி, அதை வெயிலால் கருத்துப்போயிருந்த தோலை காண்பித்தார். தொடர்ந்து, இந்த தொடர் பயணம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் ராகுல் காந்தி அவர்களிடம் உரையாடினார்.
மேலும் ராகுல் காந்தி பிரதமர் மோடியை தாக்கி ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதில்,”செங்கோட்டையில் இருந்துகொண்டு பெண்களின் மரியாதை குறித்து பேசுகிறீர்கள். ஆனால், நிஜத்தில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு ஆதரவளிக்கிறீர்கள். பிரதமரின் வாக்குறுதிக்கும், அவரின் நோக்கத்திற்குமான வித்தியாசம் புரிந்துவிட்டது. அவர்கள் பெண்களை ஏமாற்ற மட்டுமே செய்துள்ளார்” என பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர்களின் விடுதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசின் ஒப்புதல் உடன்தான் அவர்களை விடுவித்ததாக குஜராத் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.