மதுரையில் குவிந்த ஆட்டு வியாபாரிகள்!
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்காத வீடு கூட இருக்கும், ஆனால் கறி சாப்பிடாத வீடு இருக்காது. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக கோழி, ஆடு, மீன் வியாபாரங்கள் மந்தமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிவடைந்ததாலும் தீபாவளி நெருங்குவதாலும் ஆடு விற்பனை அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் வாரம்தோறும் ஆட்டுச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக ஆடு விற்பனை மந்தமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்து தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஆடு விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டது.
திண்டுக்கல்,ராமநாதபுரம், சிவகங்கை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்த சந்தையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.