‘ஒற்றை ஜடையா போடுகிறாய்?’.. பள்ளி மாணவியை அறைக்குள் பூட்டி தலைமுடியை வெட்டிய பிரின்சிபல்!

இரட்டை ஜடை போடாமல் பள்ளிக்கு வந்த மாணவியை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிய பள்ளி பிரின்சிபல், தலைமுடியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தின் நவாப்கஞ்ச் பகுதியிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் சென்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் ஒற்றை ஜடை போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்றதற்காக தன்னை ஒரு வகுப்பறையில் வைத்து பூட்டி, தனது அனுமதியின்றி தலைமுடியை வெட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பிரின்சிபல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மாணவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் பள்ளியில் முதன்முறையாக நடக்கவில்லை என்றும், ஏற்கனவே வேறு சில மாணவிகளின் தலைமுடியை வெட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மாணவியின் புகாரில், பிரின்சிபல் பள்ளிக்கு அனைத்து மாணவிகளும் இரண்டு ஜடை போட்டுக்கொண்டுதான் வரவேண்டும் என விதிமுறைகளை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தான் ஒற்றை ஜடை போட்டுக்கொண்டு சென்றது பிரின்சிபலுக்கு கோபத்தை மூட்டியதால் தலைமுடியை வெட்டியதாக தெரிவித்துள்ளார்.
image
இதுகுறித்து மேரப்பூர் காவல்நிலையஆய்வாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ’’மாணவியின் புகாரின் அடிப்படையில், பிரின்சிபல் சுமித் யாதவ்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 353 ஏ (உடல் தொடர்பு மற்றும் விரும்பத்தகாத மற்றும் வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய செயல்கள்) மற்றும் 342 (தவறான சிறைவைப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது தலைமறைவாக உள்ள பிரின்சிபலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்’’ என தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.