டேராடுன்: உத்தரகாண்ட்டின் கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட்டின் குப்தகாசியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்காக 4 பக்தர்கள் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரில் 2 மாலுமிகள் இருந்தனர்.
இவர்கள் கேதார்நாத் அருகே சென்று கொண்டிருந்தபோது பாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் அறிவித்தார்.
ஹெலிகாப்டர் பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து மிகவும் துயரகரமானது என தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விபத்து தொடர்பாக மாநில அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கேதார்ந்த் அருகே விபத்துக்குள்ளான செய்தி வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், துயரத்தை எதிர்கொள்வதற்கான மன உறுதியை கடவுள் அவர்களுக்கு அருளட்டும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.