உத்தரகாண்ட மாநிலம், கேதார்நாத் அருகே இன்று பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக்கின் கருட் சட்டி அருகே உள்ள கேதார்நாத் கோயிலிலிருந்து காலை 11:40 மணியளவில் புறப்பட்டது. அப்போது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தபோது தீப்பிடித்ததாகத் தகவல் வெளியானதையடுத்து, சம்பவ இடத்துக்கு மீட்புப்பணியினர் விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை ஆறு யாத்திரீகர்கள் மற்றும் விமானியின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களான பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்திருக்கிறது. போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.