கோபியில் வாய்க்காலை அடைத்ததால் மழை நீர் புகுந்து ரூ1 கோடி பயிர்கள் சேதம்

கோபி: கோபி அருகே வாயக்காலை அடைத்து வைத்ததால், மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த அந்தியூர் சாலை புதுக்கரைபுதூரில் தடப்பள்ளி வாய்க்கால் கரை பாலம் அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்ததாரர் வாய்க்காலை அடைத்து வைத்து பணிகளை செய்து வந்தனர். நேற்று இரவு கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த கனமழை காரணமாக தடப்பள்ளி வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வெளியேறியது.

இதில், தடப்பள்ளி வாய்க்கால் அடைக்கப்பட்டிருந்ததால், அருகில் இருந்த சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு, வாழை, நெல் வயல்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், புதுக்கரைபுதூரில் சுமார் ரூ.ஒரு கோடி அளவிற்கு விவசாய பயிர்கள் சேதமடைந்தது. கடந்த ஒரு மாதமாக பாலம் அகலப்படுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் இதே போன்று வாய்க்கால் அமைக்கப்பட்டதால், மழை நீர் வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த கோபி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் அடைப்பை அகற்றினர். அதன் பின்னரே வாய்க்காலில் தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் உடைப்பு ஏற்படாமல் இருக்க 30வது மைல் வரை உள்ள அனைத்து மதகுகளையும் திறந்து மழைநீர் வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.