புதுடெல்லி: சாத்தான்குளம் போலீஸ் கஸ்டடி மரண வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய எஸ்ஐ ரகுகணேசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020 ஜூன் மாதம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காவலர்கள் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரகுகணேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குற்றச்சம்பவம் நடந்த போது, சம்பந்தப்பட்ட இடத்தில் நான் இல்லை. எனவே இவ்வழக்கை ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஏதாவது ஒரு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட என்னை, பாளையங்கோட்டை சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்தர் பட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 105 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 45 முறை விசாரணைகள் நடந்துள்ளன. சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவோ, மனுதாரரை வேறு சிறைக்கு மாற்றுவதால் எவ்வித சாத்தியக் கூறுகளும் இல்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாரர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது’ என்றார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து வழக்கை விசாரிக்கலாம். சிபிஐ விசாரணைக்கும் தடையில்லை. வேறு மாநிலங்களுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரரை வேறு சிறைக்கும் மாற்ற முடியாது. தற்போதுள்ள நிலையே தொடரலாம்’ என்று உத்தரவிட்டு, ரகுகணேஷின் மனுவை தள்ளுபடி செய்தனர்.