சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 659 வாக்குகள் பதிவாகின. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவை சேர்ந்த சசிதரூர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 711 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு கியூஆர் கோடு உடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தேர்தலில் வாக்களிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் நேற்று முன்தினமே சென்னைக்கு வந்துவிட்டனர். அவர்கள் ஓட்டல்களில் தங்குவதற்கு கார்கே அணியை சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்பினரும், சசிதரூர் அணியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் தரப்பினரும் ஏற்பாடு செய்தனர். வாக்குப்பதிவுக்காக டெல்லியில் இருந்து 4 பிரத்யேக வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்காளர்பட்டியல்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஆகியவை வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொருளாளர் ரூபி மனோகர், முன்னாள்தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். உடல்நலக் குறைவால் குமரி அனந்தன் வாக்களிக்க வரவில்லை. தேர்தல் பணிக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ள ப.சிதம்பரம் உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்டோர் அந்தந்த மாநிலங்களில் வாக்களித்தனர். நேற்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சென்னையில் மொத்தம் 659 வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஹிபி ஈடன் எம்.பி. முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. 29 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.