விழுப்புரம் மாவட்டம், கெடார் பகுதியிலுள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). ஆதரவற்றவரான இவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவந்தார். இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி காலையில் முதியவர் கண்ணன் ரத்தக் காயங்களுடன் அசைவற்றுக் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். இதனால் கண்ணனின் மரணத்தை சந்தேக வழக்காக பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். போலீஸாரின் விசாரணையில், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெனிதா, மாளிவிகா ஆகிய இரண்டு திருநங்கைகளும் அவர்களின் ஆண் நண்பர்களான பாரதிசங்கர், ஜெயபிரகாஷ் ஆகியோருடன் இணைந்து முதியவர் கண்ணனை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து திருநங்கைகள் ஜெனிதா, மாளிவிகா, அவருடைய ஆண் நண்பர்கள் பாரதிசங்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை தொடர்பாக போலீஸிடம் பேசுகையில், “கடந்த சில நாள்களுக்கு முன்னர், திருநங்கைகளின் செல்போன் திருடுபோயிருக்கிறது. அதை முதியவர் கண்ணன்தான் எடுத்தார் எனச் சொல்கின்றனர். தொடர்ந்து, செல்போனை திரும்பப் பெற கண்ணனை அவர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 15-ம் தேதி இரவு 11 மணிக்கு கண்ணன் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கிறார் என்பதை உறுதிசெய்த திருநங்கைகள் ஜெனிதா, மாளிவிகா இருவரும் தங்கள் ஆண் நண்பர்களான பாரதிசங்கர், ஜெயபிரகாஷுடன் சென்று கண்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது திருநங்கை ஜெனிதா, ‘ஏலே நீதானே அன்னைக்கு எங்கிட்டருந்து செல்போனைத் திருடிட்டுப் போனே.. இப்போ ஒழுங்கா போனை திருப்பிக் கொடுத்திரு… இல்லை உன்னைக் கொன்னு புதைச்சுருவோம்’ என்று சொல்லி முதியவர் கண்ணனை அடித்து உதைத்திருக்கிறார். தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் அடித்து உதைத்தில் கண்ணன் அங்கேயே இறந்துவிட்டார்’ என்றனர். இதையடுத்து, திருநங்கைகள் ஜெனிதா, மாளிவிகா உட்பட நான்கு பேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.