புதுடெல்லி: நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவ. 9-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் வரும் நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் பேரில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் பெயரை புதிய தலைமை நீதிபதி பதவிக்கு லலித் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் நேற்று தெரிவித்தார். அவருக்கு வரும் நவம்பர் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார். நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒய்.வி.சந்திரசூட் மகன்தான் டி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.