புதுடெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார் என்று பில்கிஸ் பானு வழக்கை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2002-ல் நிகழ்ந்த குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அவரது 3 வயது பெண்குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் மத வன்முறையில் கொல்லப்பட்டனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் 11 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த நிலையில், நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் வயது மற்றும் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக குஜராத் காவல் துறை தெரிவித்தது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசு மற்றும் குஜராத் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது இது என அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (அக். 17) தாக்கல் செய்த ஆவணத்தில், மத்திய அரசின் ஒப்புதலுடனேயே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 29ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசும்போது பெண்களின் முன்னேற்றம் மற்றும் மரியாதை குறித்து பிரதமர் மோடி பேசியதாகவும், ஆனால், உண்மையில் பாலியல் குற்றவாளிகளை அவர் ஆதரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் இருவேறு நிலைப்பாடுகள் ஒன்றை தெளிவுபடுத்துகின்றன என்றும், அவர் பெண்களை ஏமாற்றுகிறார் என்பதுதான் அது என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.