சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து சரிந்துள்ளது. எனினும், தொடர்ந்து 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வந்த நிலையில், மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.95 லட்சம் கன அடி நீர் வரத்து இருந்தது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவடைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று மதியம் 1.15 லட்சம் கன அடியாகவும், மாலை 4 மணிக்கு விநாடிக்கு 95 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது. மாலை 5 மணிக்கு மேலும் நீர் வரத்து சரிந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 53 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.
அணையில் இருந்து 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் வளத்துறை மூலம் தொடர்ந்து, 11 டெல்டா மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது