புதுடெல்லி: கடந்த 2021-22 நிதியாண்டில் பெற்ற நன்கொடை விவரங்களை 16 பிராந்திய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன.
இதில், தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி (இப்போது பிஆர்எஸ்) ரூ.193.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.154 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதுபோல ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக ரூ.80 கோடி (தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.60 கோடி), தெலுங்கு தேசம் ரூ.62.9 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன.
சமாஜ்வாதி ரூ.33 கோடி, சிரோமணி அகாலி தளம் ரூ.13.76 கோடி, மகாராஷ்டிர கோமந்தக் கட்சி ரூ.1.86 கோடி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ரூ.1.43 கோடி, ஜன்நாயக் ஜனதா கட்சி ரூ.13.5 லட்சம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ரூ.1 லட்சம், ஆர்எல்டி ரூ.50.76 லட்சம், கேரள காங்கிரஸ் ரூ.26.62 லட்சம், கோவா பார்வேர்டு கட்சி ரூ.25 லட்சம், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ரூ.7.3 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன. ஒடிசாவில் ஆளும் பிஜேடி, அனைத்து இந்திய பார்வேர்டு பிளாக் மற்றும் அதிமுக ஆகியவை நன்கொடை பெறவில்லை என தெரிவித்துள்ளன.