வாய்த்தகராறில் தொடங்கி மோதலில் முடிந்த சண்டை – ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட இளைஞர்

மேற்கு வங்கத்தில் வாய்த்தகராறில் ஆரம்பித்த சண்டையால் ஓடும் ரயிலிலிருந்து இளைஞர் ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சனிக்கிழமை இரவு பிர்பும் மாவட்டத்திலுள்ள தாராபித் சாலை மற்றும் ராம்புர்ஹாத் நிலையத்துக்கு இடைபட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹோவ்ரா- மால்தா டவுன் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு ரயில்வே போலீஸ் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் சாஜல் ஷேக் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த இளைஞர், பெண்கள் உட்பட சக பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ஷேக் தனது கால்களை பிற பயணிகளின் இருக்கைமீது வைத்துக்கொண்டு, போன்பேசியபடியே பயணிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில், கட்டம்போட்ட சட்டை அணிந்த நபர் ஒருவர் ஷேக்கிடம் சண்டையிடுகிறார். பின்னர் சில நொடிகளில் அவர் சற்று விலகிக்கொண்டு வாய் வார்த்தைகளால் மட்டும் திட்டிப் பேசுகிறார். அப்போது இளைஞர் கூறிய வார்த்தை அந்த நபரை கோபப்படுத்தவே, மீண்டும் சண்டை தொடங்குகிறது. இந்தமுறை கட்டம்போட்ட சட்டை நபர், ஷேக்கை அலேக்காக ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசுகிறார். பின்னர் அதற்கான எந்த சலனமும் இல்லாமல் கூலாக தனது இருக்கைக்கு சென்று அமர்ந்துகொள்கிறார்.
image
ரயில் தண்டவாளத்திலிருந்து பலத்த காயங்களுடன் ஷேக்கை மீட்ட போலீசார் அவரை ராம்புர்ஹத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் சைந்தியாவில் ரயிலில் ஏறியதாகவும், சக பயணிகளின் தவறான நடத்தைக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் வாக்குமூலத்தில், ‘’நான் எனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தேன். நான் இருந்த ரயில்பெட்டியில் 2 – 3 பேர் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். அங்கு ஒரு குடும்பமும் அமர்ந்திருந்தது. எனவே நான் அப்படி நடந்துகொள்ளவேண்டாம் என கூற அங்கு சென்றேன். அதுதான் என்னுடைய தவறு.
image
அங்கிருந்த ஒரு நபர், எழுந்து எனது சட்டை காலரை பிடித்து என்னை மிரட்டினார். நான் அவரை மிரட்ட எனது பாக்கெட்டிலிருந்து ப்ளேடை எடுத்தேன். அடுத்தது எனக்கு தெரிந்தது நான் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததுதான். இது எப்படி திடீரென நடந்தது என்றுகூட எனக்கு தெரியவில்லை. சில நிமிடங்கள் நான் சுயநினைவையே இழந்துவிட்டேன். நான் எனது சுய நினைவுக்கு திரும்பியபோதுதான், நான் தண்டவாளத்தில் கிடக்கிறேன் என்பதையே உணர்ந்தேன். அப்போது எனது கைகள், கால்கள் மற்றும் தலை என அனைத்தும் வலியால் மரத்துபோயிருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஷேக்கை தண்டவாளத்தில் தூக்கியெறிந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.