ஸ்டூடியோ க்ரீன் கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் -விக்ரம் கைகோத்திருக்கும் `விக்ரம் 61′ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியிருக்கிறது. இது 3D தொழில்நுட்பத்தில் தயாராகிறது.
படப்பிடிப்பு எங்கு துவங்கியுள்ளது? முதல் ஷெட்யூல் எத்தனை நாட்கள்? ஹீரோயின் யார்? அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது உள்பட பல தகவல்களை விசாரித்தேன். ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித், விக்ரமை வைத்து இயக்கும் படம், 18ம் நூற்றாண்டு பின்னணியில் நடக்கும் கதையாகும். ரஞ்சித்தின் முதல் படமான `அட்டகத்தி’யை தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்தவர் ஞானவேல்ராஜா. பின், ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படத்தை

தயாரித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் ஒரு படத்தை இயக்க வேண்டும் விரும்பியதில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படம் 18- 19 நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால், தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல இடங்களிலும் லொகேஷன் தேடுதல் வேட்டையை நடத்தினார் பா.ரஞ்சித். அவர் மட்டுமில்லாமல் பல டீம்களாகப் பிரித்து கதைக்கான இடங்களைத் தேடி வந்தனர். ரஞ்சித்தும் இதற்காக சமீபத்தில் பெங்களூரு சென்று வந்தார். இந்நிலையில் இன்று ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி, நடந்து வருகிறது. விக்ரமுடன், பசுபதி காம்பினேஷனில் காட்சிகள் படமாக்கி வருகிறார்கள். மற்ற நடிகர்கள் விரைவில் இணையவிருக்கிறார்கள். கடப்பாவில் தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது.

‘சார்பட்டா’வை போலவே பசுபதிக்கு முக்கியமான ரோலாம். கதாநாயகியாக மாளவிகா மோகனை பரீசிலீத்து வருகின்றனர். அதே சமயம் வேறு சாய்ஸ்களும் யோசித்து வருகின்றனர். ‘நட்சத்திரம் நகர்கிறது’ கிஷோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடப்பா ஷெட்யூலை தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் சிவகங்கை ஏரியாவில் நடக்கிறது. பசுபதிக்கு ‘சார்பட்டா’வை போல இதில் அருமையான ரோல் என்றும் சொல்கிறார்கள். வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்து வருகிறார் என்றும் தகவல்.