ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்துக் கொடுத்தார். சேஸிங்கில் இந்தியாவுக்குச் சமமாக ஆடிய ஆஸ்திரேலியா சற்று திகிலைக் கிளப்பினாலும், முகமது ஷமி வீசிய அற்புதமான கடைசி ஓவரில் டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல் தோற்றது.

இதனிடையே உலகக்கோப்பை போட்டிகள் குறித்த செய்திகள் மட்டுமன்றி போட்டிக்குப் பின் நடக்கும் சில சுவாரஸ்ய சம்பவங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் முகமது ஷமி, பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு பௌலிங் டிப்ஸ் கொடுத்த வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி பயிற்சி பெற்றுவரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
Babar Azam, Mohammad Rizwan and Virat Kohli did a net session together! All three batting side by side#T20WorldCup pic.twitter.com/itIMkKsAgn
— (@Babar4life) October 17, 2022
அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளநிலையில் இந்திய வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் என மூவரும் அருகருகே பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோ சமூக வளைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகிக்கொண்டிருக்கிறது.