சிட்னி: சில நாட்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மனிதர்களின் வடிவத்தில் பெரும் வெளிச்சத்துடன் காணப்படும் அந்த வடிவம் எலியன்களால் உருவாக்கப்பட்டதா அல்லது அண்டத்தின் பெரும்விரல் ரேகையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், சிட்னி பல்கலைகழகம் இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை மீண்டும் தெளிவுப்படுத்தியதன் மூலம் அந்த வடிவம் அண்டத்தில் உள்ள WR140 என்ற நட்சத்திரம் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால், ஒரு நட்சத்திரத்தை சுற்றி எப்படி கைரேகை வடிவங்கள் தோன்றக்கூடும் என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கான பதிலையும் சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிட்னி பல்கலைகழகம் வெளியிட தகவல்: WR140 நட்சத்திரம் ரகசியம் – WR140 என்பது Wolf-Rayet நட்சத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது. அண்டத்தில் அழகாக காட்சியளிக்கு இந்த நட்சத்திரம். மிகவும் பிரகாசமாகவும் தோன்றுகிறது. சூரியக் குடும்பத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகளவிலான தூசியை இந்த நட்சத்திரங்கள் விண்வெளியில் வெளியிடுகின்றன.
WR140 நட்சத்திரம் தன்னை சுற்றி கதிர்வீச்சு மிகுந்த தீவிரத்தன்மை கொண்டதாக உள்ளது. ஒரு நொடிக்கு 1000 கிமீ வேகத்தில், அதாவது ஒளியின் வேகத்தில் 1% அளவு இங்கு தூசிகள் வீசப்படுகின்றன. WR140 நட்சத்திரத்தில் சூறாவளியை போல் காற்று வீசுகிறது. இந்தக் காற்றில் கார்பன் போன்ற தனிமங்கள் உள்ளன. அவைதான் தூசியை உருவாக்குகின்றன. WR140 என்பது பைனரி அமைப்பில் காணப்படும் தூசுகள், வாயுக்கள் நிறைந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது மற்றொரு நட்சத்திரத்துடன் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கிறது. இந்தத் தூசுகளும், வாயுகளும்தான் கைரேகை போன்ற வடிவத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாகவே WR140 நட்சத்திரம் தனது சுற்றுப்பாதைகலில் துல்லியமாக செதுக்கப்பட்ட புகை வளையங்களை வெளியேற்றுகிறது.