புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எதிர்பார்த்தபடியே மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் தனது வாழ்த்துகளை மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது என்பது மிகப் பெரிய கவுரம் மட்டுமல்ல, அது பெரிய பொறுப்பும் கூட. அந்தப் பொறுப்பைப் பெற்றுள்ள கார்கேவுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பணி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
அதேபோல், தேர்தலுக்காக எனக்கு ஆயிரக்கணக்கான சக தொண்டர்களின் ஆதரவைத் தந்தனர். அவர்களின் ஆதரவைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு நாங்கள் அனைவருமே கடன்பட்டுள்ளோம். அவர் பல்வேறு கடினமான, முக்கியமான நேரங்களில் கட்சிக்கு ஒரு நங்கூரமாக செயல்பட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் சுதந்திரமானதாக, நடுநிலையானதாக நடக்க உதவிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரு – காந்தி குடும்பத்தினருக்கு காங்கிரஸ்காரர்களின் இதயங்களில் இன்று மட்டுமல்ல என்றென்றும் சிறப்பானதொரு இடம் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லியில் உள்ளகாங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் இன்று ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்பட்டு கார்கே வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரம்:
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு; சசிதரூரை விட பன்மடங்கு வாக்குகளுடன் வெற்றி!