வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அன்றொரு நாள் ..
வீட்டின் அலமாரிகளில் துழாவிக் கொண்டிருக்கையில் எனது கண்விழிக்குள் வந்து விழுந்தது அது.
என் அப்பாவின் மூக்குக் கண்ணாடி,
அதனைக் கண்டதும் எனது நெஞ்சம் கனத்து எனது விழிகளுக்கும் அதனின் வலியை கடத்திச் சென்றது..
ஒருகணம் அதனையே வைத்த கண் வாங்காமல் விழிகளுக்குள் அதன் பிம்பத்தை படம் பிடித்துக் கொண்டே நின்றேன்..
எனது நெஞ்சகத்தில் அவரோடு வாழ்ந்த நினைவுகள் என் நெஞ்சினூடே புரவி உடலெங்கும் உள்ள நரம்புகளின் வழியே ஆனந்த யாழினை மீட்டிய வண்ணமிருந்தது..
நினைவுகள் அவர் வாழ்ந்த காலத்திற்குள் என்னை கால இயந்திரம் ஏதுமின்றி நினைவலைகளுக்குள் சுருட்டிச் சென்றது.
அப்பா மிகவும் விரும்புபவைகளுள் ஒன்று அவர்தம் பேனா, மற்றொன்று அவரது மூக்கு கண்ணாடி இவையிரண்டும் அவர் பெரிதும் விரும்பும் எழுத்துக்களோடு அவருக்கு பந்தம் சமைப்பதால் இவையிரண்டின் மீதும் அவருக்கு தீராத பிரியமிருக்கலாம் என்றுகூட தோன்றுகிறது.
இவை இரண்டையும் எப்போதும் தனது நெஞ்சோடு ஒட்டியிருக்கும் சட்டைப் பைக்குள் சுமந்தபடிதான் வெளியில் செல்வார். இவையிரண்டின் மூலம் பத்திரிகைகளை தாம் வாசிப்பதற்கும் அது குறித்த விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் அஞ்சல் அட்டைகள் மூலம் அனுப்பி வைத்துக் கொண்டே இருப்பார்.

பெரும்பாலும் அவரது ஓய்வு நேரங்கள் வாசிப்பதிலேயே கடக்கும் அப்போதெல்லாம் பேனாவும், கண்ணாடியுமே அவரது இணைபிரியா தோழர்களாக இருந்தன.
அப்பாவுக்கு நியாபக மறதி இருக்கும் அதனால் பெரும்பாலும் தாம் கொண்டு செல்லும் சிலவற்றை எங்கேனும் விட்டு வருவார். அவற்றில் பெரும்பான்மையாக கைகளில் கொண்டு செல்லும் குடை இருக்கும், அடுத்ததாக பைகள் மற்றும் இதர சாமான்கள் அதற்கு அடுத்த இடத்திற்கு போட்டியிடும். சிலநேரம் செருப்பை மாற்றி போட்டுக் கொண்டு வந்து பின்னர் திரும்பிச் சென்று அதனை அவ்விடத்தே விட்டுவிட்டு தமது செருப்பை போட்டுக் கொண்டு வருவதுண்டு.
ஆனால் ஒருபோதும் தமது கண்ணாடியையும், பேனாவையும் மறப்பதில்லை என்றேனும் அத்திப் பூத்தாற்போன்று பேனாவை மறந்து வருவதுண்டு. கண்ணாடி மட்டும் எனக்குத் தெரிந்து மறந்து வந்ததில்லை சிலமுறை கண்ணாடி உடைந்ததை மாற்றியதுண்டு.
பெரும்பாலும் படிக்கும்போது தவிர்த்து ஏனைய தருணங்களில் அவர்தம் மூக்கு கண்ணாடி சட்டைப் பைகளை விட்டு வெளியில் வருவதில்லை என்பதை தற்போது என்னிடமிருக்கும் அவரது புகைப்படத்தைக் கொண்டு அறியலாம்.
இப்படியாக அவரது கடந்த கால நியாபகங்கள் சிலவற்றை மீட்டு மீண்டும் என்னை நிகழ்காலத்திற்குள் வந்து நிறுத்தியது அலமாரிக்குள் வைக்கப் பட்டிருந்த அப்பாவின் கண்ணாடி!!.
சிறிது நேரம் என் பார்வை கண்ணாடிக்குள் உட்புகுந்து நோக்குகையில் அந்த கண்ணாடிக்குள் படர்ந்திருந்த அப்பாவின் விழிபடிமங்கள் எனையே! நோக்குவதாக உணர்ந்தேன்..
எனது எண்ணங்களினூடே சிறிது பொறாமையும் அந்த கண்ணாடிமீது பதிய ஆரம்பித்தது, எனைவிட நெருக்கத்தில் என் அப்பாவிடம் ஒட்டிக்கொண்ட தோழன் அல்லவா!..அது
பலசமயம் அவருயிரான எனது ஒவ்வொரு அசைவையும் எந்தைக்கு காட்டிக் கொடுத்த அவரது துணைவன் அல்லவா!..
பல சமயங்களில் இந்த உலகில் அவரது பல வலிகளையும் எதிர்கொண்ட அவர் விழிகளுக்குள் சுரந்து நின்ற கண்ணீரை தனக்குள் மறைத்து அவரின் நடிப்பை மறைத்த நண்பன் அல்லவா!
உலக நடப்பை அவரறிய அவரின் உயிரெழுத்துக்களை வாசிக்கத் தந்த தோழன் அல்லவா!…

இதுபோன்ற பல நினைவலைகளில் நெஞ்சு கனத்தது…
ஆதங்கத்தில் துளிர்த்து விழுந்த விழிநீர் துளியொன்று அப்பாவின் கண்ணாடியில் விழுந்தது..
விழுந்த துளியதை துடைக்க நினைக்கையில் அழாதே! மகனே! என ஆறுதலாய் பார்த்தது அப்பாவின் விழியின் படிமங்கள் கண்ணாடி குவிக்குள்ளிருந்து…
மறைந்த பின்னும் மறைய மறுப்பது அப்பாவின் அன்பு…
எண்ணமும் எழுத்தும்
பாகை இறையடியான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.