இலவசங்களுக்கு எதிராக பேசும் மோடி! – குஜராத் அரசின் இலவச வாக்குறுதிக்கு என்ன பதில்?!

கடந்த மாதங்களில் இந்தியாவில் பெரிதாகப் பேசப்பட்ட செய்தி மாநிலங்களில் வழங்கப்படும் இலவசங்கள் தேவையா இல்லையா என்பதே. அதை தொடங்கி வைத்தது அஸ்வினி உபாத்யா. குறிப்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. இதில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வழங்கத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகும் இது குறித்தான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அது உச்சத்தைத் தொட்டது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் பற்றி பேசியபோது தான். அவர், “இலவசங்கள் நமது குழந்தைகளின் உரிமையைப் பறித்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும், சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்” என்றார்.

உச்சநீதிமன்றம்

ஆனால் தற்போது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலேயே இலவசங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை 4000 கிராமங்களுக்கு இலவச இணைய சேவை வசதி , மாதந்தோறும் கர்ப்பிணிகளுக்கு, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் என 1000 நாள்களுக்கு வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு ஒரு டிரம் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் வாளிகளும், அரசாங்க பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இலவசங்களுக்கு சில நாள்கள் முன்பு நோ, இப்போது எஸ், சொல்லியிருக்கும் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்னும் கேள்விகளைப் பிரதமரிடம் முன்வைத்தால் அவரின் பதில் என்னவாக இருக்கும்?

வட மாநிலங்கள்

1. வட மாநிலங்களில் இலவசங்களின் நுழைவு.

பாஜக அரசு இந்தியா முழுவதிலும் ஆட்சியமைக்க வேண்டும் என திட்டமிட்டது. அதற்கு முதல் தடையாக இருந்த காங்கிரஸை முற்றிலுமாக ஓரங்கட்டியது. ஒரு காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் கால் பதித்த காங்கிரஸ் தற்போது 2 மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் உள்ளது.

ஆனால், தற்போது மாநில கட்சிகளின் வளர்ச்சி பாஜக-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை சரிகட்டவே மாநில கட்சிகளுக்குப் பல இடையூறுகளைக் கொண்டு வர திட்டமிட்டனர். அதில் முக்கியமான நகர்வுதான் இந்த மாநில கட்சிகளுக்கு கூடுதல் மதிப்பை உண்டாக்கும் இலவச நலத்திட்டங்களை முடக்குவது. குறிப்பாக, தென் மாநிலங்களில் இருந்த இலவச திட்டங்கள் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசால் வட மாநிலங்களிலும் எட்டிப்பார்த்தது. அதன்பிறகுதான் இலவசங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அறிவிக்கப்பட தொடங்கியது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

2. இலவசங்கள் நோக்கி மாநிலத்தின் பயணம்

தற்போது, குஜராத்தில் இலவச திட்டங்கள் பாஜகவால் அறிவிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டாம். இதற்கு முன்பு இலவச திட்டங்களால் உத்தரப்பிரதேசத்தை கைப்பற்றிய பாஜகவின் வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்த இலவச திட்டங்கள் பின்வருமாறு, “விவசாயிகள் பாசனத்திற்கு இலவச மின்சாரம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், 60 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் ,போன்ற திட்டங்கள் பாஜக ஆளும் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு கிடைத்த வெற்றிதான் இதே ஸ்டெடர்ஜியை குஜராத்திலும் பின்பற்ற வைத்துள்ளது.

உத்தரவு பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத்

3.மாநிலங்களின் வளர்ச்சி நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி

நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி இவ்வாறு குறிப்பிடுகிறார்,” கீழ்த்தட்டில் உள்ள 60% மக்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும்”. இதைத்தான் இலவச நலத்திட்டங்கள் வாயிலாக மாநில அரசுகள் செய்ய முயல்கிறது என்பதை புரிந்திருக்கலாம். அதனால்தான், இலவசங்கள் நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை ஏற்படுத்தும் என வரி செலுத்தும் பணக்காரர்களை பற்றி யோசித்த பாஜக அரசு தீடீரென நடுத்தர மக்களின் நலனுக்காக திட்டங்ககளை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம்.

அபிஜித் பானர்ஜி

4.மத்திய அரசாக எதிர்ப்பு…மாநில அரசாக ஏற்பு!

மத்தியில் இருக்கும் பாஜக அரசு இலவசங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. அதுவே மாநில கட்சியாக எடுத்துக் கொண்டால் இலவச திட்டங்களை அறிவிக்கிறது. இந்த முரண்தான் பாஜக மீது பிற கட்சிகளின் விமர்சனம் செய்ய காரணம்.

பிரதமர் மோடி

அரசால் மக்களுக்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் கட்டணமின்றி இருக்கும் நிலையில் அது இலவசம் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால், சமூக நலனுக்காக அறிவிக்கப்படும் அதுபோன்ற திட்டங்களை “இலவசம்” என்ற சொல்லால் அழைப்பதைக் காட்டிலும், சமூக நலத்திட்டம் எனக் குறிப்பிடுவதே சரியான சொல்லாகும். பாஜக அல்லாத, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் சமூக நலன் திட்டத்திற்கும் வெறும் இலவசத்துக்கான திட்டங்களின் வித்தியாசத்தைப் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், பாஜகவிற்கு அந்த வித்தியாசம் புரியாமல் இருப்பதே இவர்களின் முரண்பட்ட செயலுக்கான காரணம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.