உண்மையை மறைத்த சபாநாயகர்?; பகீர் கிளப்பிய எடப்பாடி!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே, சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸ் கைது செய்தது.

இதன் பிறகு கைது செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை தேர்ந்தெடுத்தோம். பின்னர் அது குறித்த கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரிடம் கொடுத்தோம். மீண்டும் 2 முறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தோம். ஆனாலும் சபாநாயகர் 3 மாதமாக கிடப்பில் போட்டுவிட்டு எந்த முடிவையும் சொல்லவில்லை.

இந்நிலையில் நேற்று, மூத்த எம்.எல்.ஏ.க்களுடன் சபாநாயகரை நேரில் சந்தித்து முழுமையாக விளக்கம் அளித்தோம். ஆனால் அவர் ஏற்கவில்லை.

, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை.

ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்தை அமரச் செய்தனர். இது என்ன நியாயம்? சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார்.

எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில்தான் சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு இருக்கைகளை ஒதுக்க வேண்டும். ஆனால் சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை கேட்டு சபாநாயகர் செயல்படுகிறார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. பொதுமக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மனநிலையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். வேண்டும் என்றே அதிமுகவை முடக்கவும், சிதைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

ஸ்டாலின் உங்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். நீதிமன்றத்திலே வழக்கு இருப்பதாக சொல்கிறார். இது உண்மைக்கு மாறான பொய்.

சட்டப்பேரவை தலைவர் உண்மையை மறைத்து பேசுகிறார். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு எல்லா ஊடகத்திலும் வந்துள்ளது. ஆனால் சட்ட பேரவை தலைவர் அதை மறைத்து ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செயல்படுகிறார். பச்சையாக தெரிகிறது. ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் செயல்படுகிறார். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.