கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமெனவும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, ஜூலை 18 ஆம் தேதி உத்தரவுக்கு பிறகு தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 11 மரணங்கள் குறித்த வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேகமாக சிபிசிஐடி உருவாக்கப்பட்டதாகவும், எந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டுமென வழக்கின் தன்மை குறித்து டிஜிபி முடிவு செய்வதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக சிபிசிஐடி போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவையும் மாற்றியமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
image
இதை ஏற்ற நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்து உத்தரவிட்டார். இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, கல்வித்துறை விசாரணைக்கு பின்னர் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற உத்தரவை மாற்றியமைத்த நீதிபதி சதிஷ்குமார், வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார். மேலும், மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.