ருத்ரபிரயாக், உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சென்ற ஆறு யாத்ரீகர்கள், ஹெலிகாப்டர் வாயிலாக குப்த்காஷிக்கு பயணம் மேற்கொண்டனர்.
ருத்ரபிரயாக் மாவட்டம் கருட் சாட்டி அருகே நேற்று காலை 11:45 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலையால், மலை மீது அந்த ஹெலிகாப்டர் மோதி, தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.
இதில், அதில் பயணம் செய்த ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி உயிரிழந்தனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், உத்தரகண்ட் மற்றும் புதுடில்லி பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர்.
இந்த விபத்தில் உயிர் இழந்தோரில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்த சுஜாதா, 56, பிரேம் குமார், கலா, 60, என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள், சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என உத்தரகண்ட் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர குஜராத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விமானி அனில் சிங்கும், 57, இந்த விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ல், உத்தரகண்டின் உத்தரகாசியில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடக்கும் மிகப் பெரிய ஹெலிகாப்டர் விபத்து இதுவாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்