பாரத் இந்தி பிரச்சார சபா சார்பில் இந்தி மொழி பயில்வோருக்கு ஆண்டுதோறும் தேர்வு வைக்கப்படும். இந்த தேர்வானது ஹிந்தி மொழி கற்க ஆர்வம் உள்ள அனைவரும் பங்கு பெற்று ஹிந்தி மொழிக் கற்றல் திறமையை சோதித்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இந்த தேர்வு எழுதும் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் மூன்று லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
இதுகுறித்து ஹிந்தி பிரச்சார சபா செயலர் செல்வராஜன் கூறியதாவது “கடந்த ஆண்டு சுமார் 3 லட்சம் மாணவர்கள் இந்த பரீட்சைகளை எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை நிலையானதாகவும் இருக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வாகவும் இருக்கிறது. இவர்களில் மாணவர்கள் 60% பேர், வேலை தேடுவோர் 30% பேர், விருப்பத்தின் பேரில் பிற மொழியை கற்போர் 10% பேர் தேர்வு எழுதியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் நேரம் நிறைய கிடைத்ததால் அந்த நேரத்தில் பலரும் ஆர்வமுடன் இந்தி கற்றுள்ளனர். இந்தி கற்பதன் மூலம் இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்த உள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த 2021ல் இந்தி பிரச்சார சபாவில் ஹிந்தி பயின்றோரின் எண்ணிக்கை 30,985 பேர். இதில் தேர்வு எழுதி 16,167 மாணவர்கள் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-2018 காலகட்டத்தில் சென்னையில் இருந்து 39,191 மாணவர்களும், தமிழகம் முழுவதும் 48,778 மாணவர்களும் இந்தி பிரச்சார சபா மூலம் இந்தி பயில பதிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.