புதுடெல்லி: தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பல் இடையேயுள்ள தொடர்புகளை கண்டறியும் வகையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஒரே நேரத்தில் மூன்று மாநிலங்களில் நேற்று சோதனை நடத்தியது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
நிழல் உலக தாதாக்கள் பலர், கொள்ளை கும்பல் தலைவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தான், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பானகாரியங்களை இந்தியாவில் செயல்படுத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தீவிரவாதிகள், கொள்ளை கும்பல் தலைவர்கள் மற்றும் போதை மருந்து கடத்தல்காரர்கள் இடையே வளர்ந்து வரும் தொடர்புகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப்,ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்ட பிறகு என்ஐஏஅதிகாரிகள் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த செப்டம்பர் 12-ல் சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கிகள், வெடிமருந்துகள், போதை மருந்து, ரொக்கம், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.