தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் – ஸ்டாலின் உறுதி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகளும் சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இடம் பெற்றுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ள அனைவர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்பட தவறு செய்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.” என உறுதியளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சத்தமும் – மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி இன்றும் தனது மனதை வாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என திட்டவட்டம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை கடப்பாரையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவான் எனும் அளவிற்கு பெரிய பொய்யை எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் சொன்னார்; அவர் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது எனவும் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில், காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியுள்ளது. அதன் நடைமுறையில் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமல் செய்யத் தகாதவற்றைச் செய்திருக்கிறது என்று மட்டுமே ஆணையம் முடிவுக்கு வரவேண்டியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

மேலும், தடை உத்தரவை பொது மக்களுக்கு தாமதமாக பிரகடனம் செய்திருப்பதாலும், பொதுமக்களுக்கு அதை முறையாக பிரகடனம் செய்யாததாலும், தடை உத்தரவை மக்கள் மீறியதாகச் சொல்வதே தவறு என்கிறது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை திட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில நுண்ணறிவு துறை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அப்போதயை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கூறியிருந்தாலும் எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அருணா ஜெகதீசன் அறிக்கை கூறுகிறது.

ஆறுமுகசாமி அறிக்கையை காட்டிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடியில் நடந்தது அரச பயங்கரவாதம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அந்த அறிக்கை. காவல்துறையின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை, அலட்சியம் ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது ஆணையத்தின் அறிக்கை. எனவே, இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டிப்பாக கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். இது சரியான நகர்வாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டிருந்தாலும், கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் அரசு நிற்கிறது என்பதை காட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.