தேவர் தங்கக்கவசம்: அதிமுக பொருளாளர் மனுத்தாக்கல்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து செல்லும் அதிகாரத்தை வழங்க கோரி அதிமுக பொருளாளர்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அந்த மனுவில், “விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்து பின்பு மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்று செல்வார்கள்.

தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் எங்களிடம் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க கவசத்தினை எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அதிமுக சார்பாக உபயோகப்படுத்தும் அதிகாரத்தை வழங்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.