பொறுப்புடன் பேசுங்க : ரஜினிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் அட்வைஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு கண்டம் தெரிவித்துள்ள ஆணையம், அவர் பொறுப்புடன் பேச வெண்டும் என்ற அறிவுரையும் வழங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தென்னிந்தியானின் புகழ் பெற்ற நடிகரான ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனது வீட்டில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் சில கருத்துகளை கூறியிருந்தார். அது முழுக்க முழுக்க அரசு இயந்திரம் செயல்படாமல் போனதாலும், உளவுத்துறையின் தோல்வியாலும்தான் நடந்த சம்பவம் என்றும், அதனால் தான் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அளித்த தனது 2-வது பேட்டியில், ஊர்வலத்தில் சில சமூக விரோதிகள் நுழைந்து காவல் துறையினர் மீது தாக்குதலை நடத்தினர் என்றும் ஆட்சியர் அலுவலகத்தை உடைத்து, ஸ்டெர்லைட் அலுவலர் குடியிருப்பில் தீ வைத்தனர் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஆணையத்தின் விசாரணையின் போது சமூக விரோதிகள் மூலமாகத் தான் அப்படி நடந்திருக்க முடியும் என்று தான் நம்பி கருத்து கூறியதாகவும், ஆனால் அந்த கருத்துகளுக்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ரஜினிகாந்தே பின்னர் தெளிவாக விளக்கம் அளித்தார். மேலும் தனது கருத்துகளுக்கான ஆவணங்கள், ஆதார அம்சங்கள், அதுதொடர்பான ஊடக தகவல்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்பதையும் மிக நேர்மையாக தெரிவித்தார்.

மக்கள் மீதான தாக்குதல் பற்றிய கருத்தை கூறும்போது ஆதாரம் இருப்பது அவசியம். அதை அவர் சரிபார்க்க வேண்டும் அந்த கருத்து பல பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடும். சமூகத்தில் புகழ் பெற்றவர்களால் கூறப்படும் இதுபோன்ற கருத்துகள், பிரச்சினையை தீர்ப்பதற்கு பயன்படாமல் அதை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே அதுபோன்றவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், சினிமா நடிகர்கள் இதுபோன்ற கருத்துகளை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.