சென்னை: போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசின் மருத்துவத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும் மருத்துவரின் உரிய பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும்.
அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை மருந்துவர் அளித்த பரிந்துரையைவிட அதிக அளவு எடுத்துக் கொண்டால் அந்த மருந்துகள் போதை உணர்வை ஏற்படுத்தும். இந்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்படி குறிப்பிட்ட அளவுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்த வகையான மருந்துகளை விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.